செய்தியாளர்: சந்தானகுமார்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர்....
“தமிழ்நாடு முழுவதும் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தினமும் கொலைகள் நடைபெறுகிறது. கூலிப்படை மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்றாக இல்லாத காரணத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றனர். குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றால் வாக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத் தேர்தலில் மிரட்டிய புகார்கள் உள்ளன. தற்போது பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி வருகின்றனர்.
பொய் வாக்குறுதியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபட்டுள்ளனர். இந்த தேர்தலில் பாமகவிற்கு வாக்கு அளிப்பதன் மூலம் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு எச்சரிக்கை மணி அடிப்பது போல இந்த தேர்தல் அமைய வேண்டும் என்பது எங்களுக்கு விருப்பம். அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பல கொலைகள் நடைபெறுகிறது. 150 கொலைகளுக்கு மேல் நடைபெற்றுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. காவேரியில் தண்ணீர் வரவில்லை, பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவேன் என கூறுகிறார்கள்.
ஒரு குடும்பம் மட்டும் இங்கு பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறது. தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இதற்கு இந்த தேர்தலில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன். அதிமுக போட்டியிடாதது குறித்த பஞ்சாயத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் பாமகவிற்கு ஒற்றுமையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதே கோரிக்கை. தேர்தல் முடிந்தவுடன் பங்காளி சண்டையை பேசி கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.