“திமுகவுக்கு 60 மாதங்களில் வரவேண்டிய கெட்ட பெயர் 20 மாதங்களில் வந்துள்ளது. அமைச்சர் உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் காமெடியாக உள்ளது” என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்துக்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “அ.ம.மு.-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தொண்டர்கள் இல்லை. சில டெண்டர்கள் கிடைக்கும் என வந்தவர்கள். எந்தவொரு பின்னடைவும் இந்த இயக்கத்தை பாதிக்காது. இரட்டை இலை சின்னமும், கட்சியும் இன்று துரோகிகள் கையில் சிக்கித் தவித்து வருகிறது” என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் பேசுகையில், “கருணாநிதி முதல்வராக காரணமாக இருந்தவர், எம்.ஜி.ஆர் அவர்கள். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எங்களால் முதல்வரானவர் தான் எடப்பாடி பழனிசாமி. விருப்பப்பட்டு தான் ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பிறரின் தூண்டுதலின் பேரில் தர்மயுத்தம் மேற்கொண்டார். இன்று அவரே தான் செய்ததை தவறு என உணர்ந்து விட்டார். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது கூறி வருகிறார்.
அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா என இரண்டு அணிகளாக பிரிந்த போது, ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தமிழகம் முழுவதும் 28 இடங்களில் வெற்றி பெற்றார். அதில் ஐந்து இடங்கள் ஈரோட்டில் தான். ஈரோட்டில் நாங்கள் தான் வலிமை என சொன்ன எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றமே அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியும் - ஆளும் தி.மு.க.வுக்கு இணையாக ஈரோட்டில் பொருளாதாரத்தை செலவு செய்தும் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.-வின் தோல்வியடைந்துள்ளார்.
தி.மு.க.வுக்கு 60 மாதங்களில் வரவேண்டிய கெட்ட பெயர் 20 மாதங்களில் வந்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினரால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. பிரதான எதிர்க்கட்சியாக தன்னை தெரிவித்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. நான்கூட 20 முதல் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க. வெற்றி பெறும் என்று நினைத்தேன்.
இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டாலும் அது பலவீனம் அடைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு பாஜக உதவியுடன் தான் ஆட்சியை நிறைவு செய்ய முடிந்தது. மீண்டும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அ.தி.மு.க. முழுமையாக பலவீனம் அடைத்த பிறகு தான் அவர்கள் இதை உணர்வார்கள்.
எனது கட்சியிலிருந்து பிற கட்சி செல்வது அதற்கான காரணம் ஆயிரம் இருக்கலாம். என்னுடன் ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்கள் மீது குறைகளை சொல்லக்கூடாது. சொந்தக் காரணங்களுக்காகதான் இந்த கட்சியில் இருந்து விலகி பிற கட்சிக்கு நிர்வாகிகள் செல்கிறார்கள். இதை ஒன்றும் செய்ய இயலாது. அ.தி.மு.க. பலவீனம் அடைந்துள்ள காரணத்தால் தான் ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. அதே நேரத்தில் கூட்டணி பலத்தாலும் தான் தி.மு.க. வென்றது. உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் காமெடியாக உள்ளது. தீயசக்தி தி.மு.க.வை எதிர்க்க அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்” என்றார்.