திருவாரூர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் தினகரன்.
தற்போது கருணாநிதி மறைவைத்தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜனவரி 28ல் நடைபெறவுள்ள திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு, குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி, கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் 7-ஆம் தேதி விசாரிப்பதாகக் கூறினர். அதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.