16வது ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள்,கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. இது, இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி கடலோர பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பேரலையில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் உயிரிழந்தனர். பலத்த பொருட்சேதமும் ஏற்பட்டு மக்கள் தங்கள் உடமைகளையும் இழந்தனர். இந்த நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து இன்று கடலோர மாவட்டங்களில் சுனாமி நினைவு நாள் அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி:
சுனாமி பேரலை தாக்கிய 16வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று, தூத்துக்குடியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் இந்த சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கடலில் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவேண்டும் என கடல் தாய்க்கு மலர் தூவியும் பால் உற்றியும் மறைந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடலூர்:
சுனாமியால், கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களில் 31 மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் எம்ஜிஆர் திட்டு, சின்னூர், பில்லு மேடு உள்ளிட்ட கடற்கரை தீவு கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து போனது. கடலூர் மாவட்டத்தில் 610 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 16 ஆண்டுகளை கடந்தும் அந்த சோகம் தீராமல் இன்றும் மீனவர் மனதில் அலையாக அடித்துக் கொண்டு இருக்கிறது.
சுனாமி நினைவு தினமான இன்று மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். சோனா குப்பம் மீனவ கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் அமைதி ஊர்வலமாக சென்று கடலில் பால் ஊற்றி, மலர்தூவி உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
நெல்லை:
16ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக இடிந்த கரையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இடிந்தகரை பங்குத்தந்தை பிரதீப் தலைமையில் பொதுமக்கள் கடற்கரைக்கு ஊர்வலமாக சென்று சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்பு பிரார்த்தனை செய்த புனித நீரை கடலில் தெளித்தும், மலர்களை தூவியும், பால் ஊற்றியும் பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
வேதாரண்யம்:
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ஆறுகாட்டுத்துறை கடலில் கைத்தறித்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன், நாகை மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ் பஞ்சாயத்தார்கள், கிராம மக்கள் கடலில் பாலை ஊற்றி கடல் அன்னைக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மீன்பிடி இறங்குதளத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன், நாகை மக்களவை உறுப்பினர் எம்.செல்வராஜ் அரசியல் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் கிராம மக்கள், மீனவர்கள் பஞ்சாயத்தார்கள் உட்பட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல சுனாமி பேரலையில் சிக்கி வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் பதிமூன்று பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலிருந்து கிராம மக்கள், மீனவர்கள் பெண்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரணியாக முக்கிய தெருக்களின் வழியாக வந்து கடலில் பால் ஊற்றி, மெழுகுவர்த்தி ஏற்றி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை தாக்கிய சுனாமி பேரலையால் குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குளச்சல் பகுதியில் பலியான சுமார் 400 க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில அடக்கம் செய்யபட்டனர். இதே போன்று மணக்குடி மீனவ கிராமத்தில் 130 க்கும் மேற்பட்டோரும், கொட்டில்பாடு பகுதியில் 140 க்கும் மேற்பட்டோரும் ஒரே இடத்தில அடக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மணக்குடி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்திராயர் தேவாலயத்தில் இன்று காலை நினைவு திருப்பலி நடந்தது. திருப்பலியில் ஆழி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், இது போன்ற துயர சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டியும் இறைவனை பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து தேவாலயத்தில் இருந்து மௌன ஊர்வலமாக சுனாமியால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்த உறவினர்கள் அங்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். சுனாமி பேரழிவால் தங்கள் உறவினர்களை பலி கொடுத்தவர்கள் பலர் கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது, சுனாமி நினைவு தினமான இன்று குமரி கடற்கரை கிராமங்களில் இன்று யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
நாகப்பட்டிணம்:
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் சுனாமியால் 6065 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் வேளாங்கண்ணியில், சுனாமியால் உயிரிழந்த 1000-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அந்த இடத்தில் அமைந்துள்ள சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி கடற்கரையிலிருந்து அமைதிப் பேரணியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.