தமிழக அரசின் திருமண உதவித் திட்டத்தின் பலன்களை பெற 2,800 பேர் பழங்குடியினர் என போலியாக விண்ணப்பித்திருந்தது தெரியவந்துள்ளது.
அரசின் ஆவணங்களின்படி பழங்குடியினருக்கான திருமண உதவி கோரி விண்ணப்பித்து உதவி பெற்ற 680 பேர் உரிய ஆவணங்களை அளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. தகுதியற்ற 12,200 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் இவர்களில் 3000 பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை திருமண உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரம் தகுதிவாய்ந்த 1,500 பயனாளிகளுக்கு உதவி மறுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
தமிழக அரசு ஐந்து வெவ்வேறு திட்டங்களின் கீழ் திருமண உதவி அளித்து வருகிறது. தேவதாசி முறை ஒழிக்கப்படுவதற்காக உழைத்த மூவலூர் ராமாமிர்தம் பெயரில் வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்தில் இந்த குளறுபடிகள் தெரியவந்துள்ளன. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் ஒரு பெண்ணிற்கு 50,000 ரூபாய் வரை நிதியுதவியும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.