செய்தியாளர் - பிருந்தா ஶ்ரீஹரிஸ்
ஒளிப்பதிவாளர் - சரவணகுமார்
--------
பார்ப்பவரை சிறு அசைவு மாறாமல் வரையும் போர்ட்ரேட் ஓவியங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் உண்டு. ஆனால் காலத்திற்கேற்ப அதில் புதுமையைக் கொண்டு வரும் போது ட்ரெண்ட் செட்டிங்கில் அவை தனித்துவம் பெற்று விளங்குகின்றன. அந்த வகையில் இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் பிரசித்தி பெற்ற கேரிகேச்சர் (caricature) எனப்படும் ‘ஒருவரின் ஓவியத்தை கார்டூன் கலந்து வரைந்து கொடுக்கும்’ கலையை ட்ரெண்டாக்கி அசத்தி வருகிறார் திருச்சி மேலப்புதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் கேம்பியன்.
B.Ed பட்டதாரியான இவர், கொரோனா காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த ஓவியம் வரையும் வீடியோக்களை அதிகம் பார்த்து வந்துள்ளார். அதில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக அந்த வீடியோக்களின் மூலமாக வரைய கற்றுக்கொண்டு அதை தன் தொழிலாக மாற்றி இருக்கிறார்.
தன் கண்முன்னே அமரும் நபரை ஒன்றரை நிமிடத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் கிரியேட்டிவ் சிந்தனையோடு கலந்து படங்களாக வரைந்து முடிக்கிறார்.
அவ்வாறு வரையும் படங்களுக்கு ஆயில் பாஸ்டல் (oil pastol), சாப்ட் பாஸ்டல் (soft pastol),வாட்டர் கலர் (water color), கிரையான்ஸ் (crayons) உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வண்ணமும் தீட்டிக் கொடுக்கிறார்.
வெனிஸ் நகரின் வீதிகளில் ஓவியர்களால் வரையப்படும் இந்த கேரிகேட்சர் படங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வது. இந்தியாவில் மும்பை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பிரசித்தி பெற்ற இந்த ஓவியக் கலையை கற்றுக்கொண்டு, தற்போது திருச்சியிலும் ட்ரெண்டிங் ஆக்கியுள்ளார் கேம்பியன். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற புத்தகத் திருவிழா அரங்கில் நாளொன்றுக்கு நூறு நபர்களை படங்களாக வரைந்து வருமானம் ஈட்டி அசத்தியுள்ளார்.
மேலும் சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக ஆன்லைன் ஆர்டர்கள் பெற்றும் வரைந்து வருகிறார். நம்மிடையே அவர் பேசுகையில், “வாடிக்கையாளர்கள் அனுப்புகின்ற புகைப்படத்தைக் கொண்டே இந்த ஓவியங்களை வரையலாம் .
கொரோனா காலத்தில் கற்றுக்கொண்ட இதனை மக்களிடம் வரைந்து கொடுக்கும் பொழுது நூற்றில் 80 சதவீதம் பேர் இந்த ஓவியத்தை புரிந்து கொள்ளவில்லை. மக்களிடம் கொண்டு செல்வதற்காக இதனை முதலில் இலவசமாக வரைந்து கொடுத்தேன்.
ஆரம்ப காலகட்டத்தில் மக்களுக்கு இந்த ஓவியம் குறித்து கொண்டு செல்வது சிரமமாக இருந்த போதிலும், அதனை கைவிடாது தொடர்ந்து முயற்சித்தேன். அதன் விளைவாக இன்று மக்கள் தங்களுக்கு இத்தகைய ஓவியம் தான் வேண்டும் என பலரும் கேட்டு வாங்குகின்றனர். அதிக அளவில் இதை விரும்புகின்றனர். படத்தை வரைந்து அவர்கள் கையில் கொடுக்கும் பொழுது அவர்கள் புன்னகைப்பது கேரிகேச்சர் படங்கள் மீதான மக்களின் விருப்பத்தைக் காட்டுகிறது. ஆரம்ப காலத்தில் 20ரூபாயில் வரைய தொடங்கினேன். தற்போது ஓவியத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
பணிக்கு செல்லும் போது மாதம் 15,000 ரூபாய் சம்பாதித்த நிலையில், தற்போது ஆர்டர்களைப் பொறுத்து நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது.
சூழலுக்கு ஏற்றார் போல் அப்டேட்களை செய்து கொள்ளும் பொழுது நம்முடைய துறையில் நாம் சிறந்து விளங்க முடியும், நல்ல வருமானமும் ஈட்ட முடியும்” என நம்பிக்கை கூறுகிறார் இளைஞர் கேம்பியன்.
நேரடியாக படங்களை வரைவது, மெசர்மென்ட் எடுத்து வரைவது என இரண்டு வகைகள் இதில் உள்ள நிலையில், அதிக அளவிலான மக்கள் நேரடியாக அமர்ந்து தங்களை வரைவதை விரும்புகின்றனராம்.
கருப்பு-வெள்ளை, வண்ணம் தீட்டப்பட்ட படங்கள், டிஜிட்டல் கிரியேஷன் என இப்படங்களின் வகைக்கு ஏற்றார் போல் நூறு ரூபாய் தொடங்கி 2000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
எப்பொழுதும் புகைப்படங்களை பரிசாக கொடுக்கும் மக்கள், அதிலிருந்து சற்றே மாறுபட்டும், புதுவிதமாகவும் இருக்கும் இத்தகைய கேரிகேட்சர் படங்களை தங்களின் விருப்பமானவர்களுக்கு பரிசாக வழங்குவதற்காக ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மேலும் நிகழ்ச்சிகளில் நினைவு பரிசாக வழங்குவதற்கு இத்தகைய கேரிகேட்சர் ஓவியங்கள் அடங்கிய மொமெண்டோக்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விளங்குகிறது.