திருச்சியில் இளம்பெண் உயிரிழக்கக் காரணமான போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ்க்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
திருச்சி திருவெறும்பூரில் வாகனச் சோதனையின் போது நிற்காமல் சென்ற வாகனத்தை மதுபோதையில் எட்டி உதைத்ததில் கீழேவிழுந்த இளம்பெண் உயிரிழந்தார். திருவெறும்பூர் பெல் ரவுண்டானா பகுதியில் உஷா என்ற இளம்பெண் தமது கணவர் ராஜாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஹெல்மெட் அணியாத காரணத்தினால் வாகன சோதனையின்போது ராஜா நிறுத்தாமல் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் அவர்களை 7 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று எட்டி உதைத்துள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் ஆய்வாளர் காமராஜ் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில்“இந்த வாகனத்தை நான் துரத்தி சென்று விரட்டி மிதித்ததால் தான் விபத்து ஏற்பட்டு உஷா பலியானார் என திருச்சி பாய்லர் பிளாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆனால் அவர் இரு சக்கர வாகனத்தில் முன் பகுதியில் கிரைண்டர் வைத்துகொண்டு ஓட்டிசென்றதால் தான் விபத்து ஏற்பட்டது. எனவே எனக்கு விபத்திற்கும் தொடர்பில்லை.நான் 35 நாட்களாக சிறையில் உள்ளேன்”வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன், எனவே எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தாரர் வழக்கறிஞர் கூறுகையில், தொடர்ந்து 35 நாட்களாக சிறையில் உள்ளார். புகார்தாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என கூறினார். இதை தொடர்ந்து ஆய்வாளர் காமராஜ்க்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.