தலைக்கவசம் இல்லாமல் நிறைய நகைகளுடன் மதுரையை சேர்ந்த வரிச்சூர் செல்வம் என்பவர் பைக்கில் சென்ற காட்சி சமீபத்தில் சர்ச்சையானது. அதனை தொடர்ந்து வரிச்சூர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமொன்றை அளித்தார். அதில் அவர் “காயத்ரி ரகுராம் பாவம். ஒருநாள் மாஸ்டர் கணேஷ், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடவந்தார்கள். அங்கு எதேச்சையாக அவர்களை சந்தித்தேன் நான். அதனால் அங்கே அவர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டன். அதனை சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் அனுமதியின்றி வெளியிட்டார். பின்னர் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார்” என பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் திருச்சி சூர்யா சிவா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “செல்வம் தன்னை ரவுடி என சொல்ல வேண்டாம் என்கிறார். ரௌடியை வேறு என்னவென்று சொல்வது? ரௌடி என்று தானே சொல்லமுடியும்... காயத்ரி ரகுராமுக்கு ரௌடி செல்வத்துடன் என்ன வேலை? அந்த புகைப்படத்தை நான் அகற்றிவிட்டு மன்னிப்பு கேட்டதாக செல்வம் பேசியுள்ளார். ஆனால் செல்வம் கெஞ்சியதால்தான் அந்த போட்டோவை நான் அகற்றினேன். அவர் மிரட்டியோ, ரௌடி என்பதாலோ அந்த போட்டோவை அகற்றவில்லை.
அப்போது காயத்ரி ரகுராமுடன் இருந்த தனிப்பட்ட விமர்சனங்களின் வெளிப்பாடாக அந்த புகைப்படத்தை நான் வெளியிட்டேன். அது குறித்து காயத்ரி ரகுராம் எந்த விளக்கமோ, மறுப்போ இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் உண்மைக்கு மாறாக நான் மன்னிப்புக்கேட்டதாக ரௌடி செல்வம் கூறியிருக்கிறார்” என்றார். தொடர்ந்து, ஆதாரமாக அன்றைய தினம் வரிச்சூர் செல்வம், திருச்சி சூர்யா சிவாவிடம் பேசிய ஆடியோவை செய்தியாளர்கள் மத்தியில் அவர் வெளியிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், “திருச்சி சூர்யாவாகிய நான், பாஜக பிரமுராகவே இப்போதும் தொடர்கிறேன். எனது ராஜினாமாவை பாஜக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. 2026-ம் ஆண்டு வரை பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை இருப்பார். 2026-ல் பாஜக தனிப்பெருபான்மையுடன் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும். அப்போது அண்ணாமலை தான் முதல்வர். அதனை தொடர்ந்து இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவரே பாஜகவின் தலைவராக இருப்பார். நான் அண்ணாமலையின் ஏ டீம்” தெரிவித்தார்.