கஜா புயலால் பாதித்த மக்களுக்கு திருச்சியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவியை தவிர தன்னார்வலர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிகளும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள், பெற்றோர்கள் தங்களுக்கு அளிக்கக் கூடிய பணத்தில் உண்டியலில் சேமித்தவற்றையும், நிதி திரட்டியும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூ.60,000-க்கும் அதிகமான நிதியை பள்ளி தலைமை ஆசிரியையிடம் வழங்கியுள்ளனர். நமக்கு உணவிட்ட உழவர்களுக்கு நாம் உணவளிக்க கிடைத்த வாய்ப்பாக கருதி, மாணவிகள் இதனை செய்தனர்.
அந்நிதியிலிருந்து தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்திகள், அரிசி மூட்டைகள், போர்வைகள், பிஸ்கட், சோப்புகள், பற்பசை, நாப்கின்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் வாங்கப்பட்டு பள்ளி மூலமாக அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் முதல் கட்டமாக முதன்மை கல்வி அதிகாரியிடம் ரூ.25,000 வழங்கியிருந்தனர். சிறு துளி பெரு வெள்ளமென ஓரிரண்டு ரூபாயாக சேர்த்த உண்டியல் பணத்தை மாணவிகள் வழங்கியது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உள்ளது.