திருச்சியில் ஆன்லைன் ரம்மியால் கல்லூரி மாணவரொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மலையாண்டிபட்டியை சேர்ந்தவர் ரவி. பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை செய்து வரும் இவரது மகன் சந்தோஷ் (22), மணப்பாறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்திருக்கிறார். சந்தோஷ், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கி இருந்துள்ளார். இந்நிலையில் அவர் செலவுக்கு பணமின்றி கடந்த 4 ம் தேதி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்த 2 கிராம் மோதிரம் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறிய அவர், அவை அனைத்தையும் விற்று, கிடைத்த பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் தனது சமூகவலைதளத்தில் தற்கொலை செய்துகொள்ளபோவதாக ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு மணப்பாறை கீரை தோட்டம் என்ற இடத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சந்தோஷின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஜியனிரிங் படிக்கும் கல்லூரி மாணவரொருவர் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி, விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திலிருந்த அவரது தந்தையின் சோகம், அங்கிருப்போரையும் தாக்கியது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.