சிக்கன் கிரேவியில் கரப்பான் பூச்சி இருந்ததாக சுட்டிக் காட்டிய வழக்கறிஞரை ஓட்டல் உரிமையாளர் தாக்க முயன்றதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்டாலின். இவர் வழக்கு ஒன்றிற்காக ஸ்ரீரங்கத்தில் உள்ள நீதிமன்றம் சென்றுவிட்டு அவரது நண்பர்களுடன் வீடு திரும்பினார். அப்போது சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அங்கு சாப்பிட்டபோது பரோட்டா மற்றும் சிக்கன் கிரேவியில் கரப்பான் பூச்சி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை ஸ்டாலின், ஓட்டல் உரிமையாளரிடம் சுட்டிக்காட்ட முயன்றபோது அவர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், அதிகமாக பில் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் ஸ்டாலின் இதுகுறித்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ராவிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
மேலும் முறையாக பில் வழங்காதது குறித்து வணிக வரித்துறை அதிகாரிடமும் புகார் தெரிவிக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் ஸ்டாலின் கூறினார்.