திருச்சி உய்யங்கொண்டான் வாய்க்கால் கரையோரங்களில் முதலைகள் அடிக்கடி தென்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தற்போது தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை உய்யகொண்டான் வாய்க்கால் அமைந்திருக்கும் குழுமாயி அம்மன் கோயில் வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநகரின் சில பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது.
கரூர் - திருச்சி மாவட்டம் முசிறி போன்ற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக உய்யகொண்டான் வாய்க்காலில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் அப்பகுதியில் அமைந்திருக்கும் குமரன் நகர், வயலூர் ரோடு, உரையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைந்திருக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
இந்நிலையில், உய்யகொண்டான் வாய்க்காலில் தொடர்ந்து மழைநீர் சென்று கொண்டிருப்பதால் முதலைகள் கரையில் ஒதுங்கி விடுகின்றன. எட்டரை முள்ளிகரும்பூர் பகுதியில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் பொதுமக்களின் கண்களில் முதலைகள் அடிக்கடி தென்படுகிறது. அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் தன்னுடைய கைபேசியில் வாய்க்கால் கரையில் படுத்திருந்த முதலையை பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகமும் தீயணைப்புத் துறையினரும் பொதுமக்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடனும் உய்யகொண்டான் வாய்க்கால் பகுதி கரைகளில் நடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில், முதலைகளை உடனடியாக பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.