செய்தியாளர்: பிருந்தா
திருச்சி ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் கோபி என்ற கோவிந்தராஜன் (60). இவரது மகள் ஜெய ஶ்ரீ (18) திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். ஜெயஸ்ரீ அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு வடக்கு சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டுக்கு பின்புறமுள்ள மாடியிலிருந்து ஜெயஸ்ரீ கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை மீட்ட காதலன் கிஷோர், நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயஸ்ரீ உயிரிழந்துள்ளார். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெயஸ்ரீயின் காதலன் கிஷேர் மற்றும் காதலனின் நண்பர்கள் உட்பட ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர். இவர்களின் இரண்டு பேர், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.
இதனால், இது திட்டமிட்ட கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயஸ்ரீயை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார், காதலன் கிஷோரை கைது செய்தனர்.
பள்ளிப் பருவத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், உடனே திருமணம் செய்து கொள்ளும்படி ஜெயஸ்ரீ வலியுறுத்தியதாகவும், அதற்கு கிஷோர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென மாடியில் இருந்து கீழே குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.