திருச்சி கே.கே.நகரில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைக்க ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி கே.கே.நகரில் ‘லைஃப் கேர்’ என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மனநல மருத்துவர் மணிவண்ணன் என்பவர் இந்த மையத்தை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த மையத்தில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன் என்பவர் அனுமதிக்கப்பட்டார். சேர்க்கப்பட்ட 3 நாள்களில் தமிழ்ச்செல்வன் உயிரிழந்துள்ளார். அவரது உடலை மறுவாழ்வு மையத்தினரே சொந்த ஊருக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழ்ச்செல்வன் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் மறுவாழ்வு மையத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்டோர் சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது.
மறுவாழ்வு மைய ஊழியர்கள் நோயாளிகளை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து பொதுமக்கள் இணைந்து சங்கிலிகளை அகற்றி நோயாளிகளை மீட்டதோடு அந்த மறுவாழ்வு மையத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மனநல மருத்துவர் நிரஞ்சனா தலைமையில் மருத்துவக்குழு அந்தப் போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்தியது.
இந்நிலையில், திருச்சி கே.கே.நகரிலுள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைக்க ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.