திருச்சி அடுக்குமாடி கட்டட விபத்தில் 4 பேர் பலி: பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை!

திருச்சி அடுக்குமாடி கட்டட விபத்தில் 4 பேர் பலி: பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை!
திருச்சி அடுக்குமாடி கட்டட விபத்தில் 4 பேர் பலி: பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை!
Published on

திருச்சி மலைக்கோட்டை அருகே மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் கணவர் மற்றும் மகனை இழந்து ஒரு பெண்ணும், தாய் மற்றும் தந்தையை இழந்து, ஒரு குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள துயரம் நேரிட்டுள்ளது. கொடூரமான இந்த விபத்துக்கு தரமற்ற முறையில் கட்டடம் கட்டடப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

திருச்சி மலைக்கோட்டை அருகே இருந்த இந்த மூன்று அடுக்குமாடிக் கட்டடத்தில் இரண்டு குடும்பங்களும், வெளியூர்களில் இருந்து தங்கி வேலை பார்க்கும் 3 இளைஞர்களும் தங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில், திடீரென கட்டடம் மளமளவென சரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 3 இளைஞர்களும் தாங்களாகவே இடிபாடுகளில் இருந்து எழுந்து வந்தனர். கட்டடத்தில் இருந்த 2 குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன.

மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், காலை பத்து மணி அளவில் கார்த்திக்கின் மனைவி கார்த்திகாவின் முனகல் சப்தம் கேட்டு இடிபாடுகளை அகற்றிய மீட்புப் படையினர் அவரை பலத்த காயங்களுடன் மீட்டனர். ஆனால் அவரது கணவர் கார்த்திக், அவரது 5 வயது மகன் ஹரீஷ் ஆகியோர் சடலங்களாகத்தான் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து மற்றொரு குடும்பத்தை மீட்கும் முயற்சிகளை மீட்புக்குழுவினர் மேற்கொண்டனர். மீட்புப்பணிகள் தொடங்கிய 6 மணிநேரத்திற்கு பின் பரமேஸ்வரி என்ற 2 வயது குழந்தை உயிருடன் எந்த காயங்களும் இன்றி மீட்கப்பட்டது. இதனால் அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஆனால் துயர நிகழ்வாக பரமேஸ்வரியின் தந்தை பழனி, தாய் ராசாத்தி ஆகியோர் சடலங்களாகத்தான் மீட்கப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் காது கேட்காத குறை இருந்தது. விபத்துக்குள்ளான கட்டடம் செம்மண், சுண்ணாம்பு காரையால் 3 அடுக்குக்கு கட்டப்பட்டது. முப்பத்தாண்டுகளுக்கு முன் ஒவ்வொரு அடுக்காக கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் அஸ்திவாரம் பலமில்லாததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுபோன்ற தரமற்ற கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எம்.பி பா.குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். விபத்தையடுத்து கட்டட உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com