ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் நலமாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் வருகை தந்துள்ளனர். தற்போது குழந்தையை கயிறு கட்டி அதன்மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மதுரையில் இருந்து மணிகண்டன் என்பவர், குழந்தையை மீட்பதற்காக பிரத்யேக கருவியை கொண்டு வந்துள்ளார். அதன்மூலம் குழந்தை தற்போது மீட்கப்பட்டு வருகிறது. குழந்தையின் ஒரு கையில் சுருக்கு போடப்பட்டிருக்கும் நிலையில், மறு கையிலும் சுருக்கு போடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “குழந்தை நலமாக உள்ளது. குழந்தையின் சித்தப்பா, தந்தை உள்ளிட்டோரை வைத்து பேசி குழந்தையை ஆறுதல் படுத்தியுள்ளோம். பிரேத்யக கருவி மூலம் மிகவும் நுட்பமான முறையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. குழந்தை பத்திரமாக மீட்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.