செய்தியாளர்: சுரேஷ்
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு திருச்சி, தேனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேனியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் போட்டியிடும் நிலையில், திருச்சியில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்க வருவதாக இருந்தது. இதற்கு முன்பாக அங்கு வந்த நடிகை சிஆர்.சரஸ்வதி, வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வாக்கு கேட்டார்.
அப்போது தனது கட்சியின் கூட்டணி எது என்று தெரியாமல் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என வாக்கு கேட்டது அமமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அருகில் இருந்த சாருபாலா, நமது கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல என்டிஏ கூட்டணி என திருத்தியதை தொடர்ந்து சிஆர்.சரஸ்வதி என்டிஏ கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கூறினார்.
அதேபோல் டிடிவி தினகரன் வாக்கு சேகரித்த போது, தனது கட்சி வேட்பாளர் செந்தில்நாதன் மாநகராட்சி கவுன்சிலராக திறன்பட செயல்படுவதாக கூறினார். ஆனார் வேட்பாளர் செந்தில்நாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியது.
மக்களவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பரப்புரையின் போது பல தலைவர்களும் இதேபோல், மாற்றி பேசி பல்ப் வாங்கி வருகிறார்கள்.