செய்தியாளர்: நிக்சன்
திருச்சி மாவட்டம், லால்குடி உட்கோட்டம் நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் காவல்துறை எல்லையில் உள்ளது. கொள்ளிடம் ஆறு மற்றும் பங்குனி ஆற்றில் தினந்தோறும் இரவு நேரத்தில் மணல் மாபியா கும்பல் மணல் கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் கொள்ளிடம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்தள்ளனர்.
இந்நிலையில், அந்த புகாருக்கு கொள்ளிடம் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மணல் கடத்தலில் ஈடுபடும் மணல் மாபியா கும்பலுக்கு ஆதரித்து பணம் பெற்றுக் கொண்டு கண்டும் காணமல் இருந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், மணல் மாபியா கும்பலுக்கு எதிராக யாரேனும் புகார் அளித்தால் அந்த நபர்களை மணல் மாப்பியா கும்பலிடம் காட்டிக் கொடுப்பதாகவும் திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமாரின் தனி பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட கொள்ளிடம் காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன் தவிர 25 போலீசாரையும் திருச்சி ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து எஸ்பி வருண்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றிய எழுத்தர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலைமை காவலர் முதல்நிலை காவலர் இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட 25 காவலர்கள் கூண்டோடு அயுதப்படைக்கு மாற்றப்பட்டிருப்பது திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற குற்றம் மற்றும் கடத்தல் கும்பலுக்கு துணை போகும் காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.