சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் அழிந்ததை போல, தர்மபுரி அருகே மறைக்கப்பட்ட அம்மாபேட்டை என்கின்ற மலை கிராமத்தை 82 ஆண்டுகளுக்கு பிறகு மலைவாழ் மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், கோட்டபட்டி ஊராட்சியில் கோட்டப்பட்டி, சூரநத்தம், மங்களப்பட்டி, அண்ணாநகர், குழுமிநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. கோட்டப்பட்டி, சிட்லிங் பகுதியில் உள்ள மலை கிராமங்களில், அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். கோட்டப்பட்டி-சிட்லிங் செல்லும் சாலை வனப்பகுதியை கடந்து, அம்மாபேட்டை ஆறு அருகே சேலத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரது சொந்தமான விவசாய நிலத்தை சந்திரன் என்பவருக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பு குத்தகைக்கு விடப்பட்டது. சந்திரன் இன்று வரை அந்த நிலத்தை பராமரிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரம் அந்த நிலத்தை விற்பனை செய்யப் போவதாக சந்திரனிடம் கூறியுள்ளார். அதற்கு சந்திரன் நிலத்தை விற்பதாக இருந்தால் எனக்கு கொடுத்து விடுங்கள், 40 வருடங்களாக நான் இதை பராமரிப்பு செய்து வருகிறேன் அதனால் நான் வாங்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஈரோட்டைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் அந்த நிலத்தை சந்திரனுக்கு தெரியாமல் வாங்கியுள்ளார். இதனால் குணசேகரன் சந்திரனிடம் நிலத்தை விட்டு வெளியேர கூறியுள்ளார், அதற்கு 40 ஆண்டுகளாக நிலத்தை பராமரித்து வந்துள்ளேன். நீங்கள் நிலம் விற்றவரை வரச் சொல்லுங்கள் நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என்று சந்திரன் பதில் அளித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்தது. மேலும் இது தொடர்பாக கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் சந்திரன் புகார் கொடுத்துள்ளனர். அதற்கு போலீசார் சந்திரனிடம் ஆதாரம் கேட்டுள்ளனர். தடுமாறிய சந்திரன் மலைநாடு மக்கள் கட்சி நிறுவனர் ராமசாமி சந்தித்து நடந்ததை கூறியுள்ளார். பின்னர் அந்த கட்சியினர் தலையிட்டு அந்த நிலத்திற்கான ஆதாரங்களை திரட்டினர். அப்போது, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈசி எடுத்துப் பார்த்த போது அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அந்த நிலம் 1937 ஆம் ஆண்டு அம்மாபேட்டை என்ற மலை கிராமம் ஆக இருந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த போது, 1937 ஆம் ஆண்டு சேலம் ஜில்லா அரூர் தாலுக்கா கோட்டப்பட்டி - சிட்டிலிங் செல்லும் சாலையில் இடையில் அம்மாபேட்டை என்ற மலை கிராமம் இருந்ததும், அங்கு மலைவாழ் மக்கள் வீடு கட்டி குடியிருந்து வந்ததும் தெரியவந்தது. வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதியில் இருந்த மலைவாழ் இனத்தை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் லட்சுமணன் அங்கு வாழ்ந்த மலைவாழ் மக்களை மிரட்டியோ அல்லது விஷக்காய்ச்சல் பரவுகிறது என்று பொய் சொல்லியோ கிராம மக்களை வெளியேற்றி இருக்கலாம் என்றும் அதன் பின்னர் சுமார் 14 ஏக்கர் கொண்ட அந்த கிராமத்தை தன் பெயருக்கும் அவரது தம்பி குழந்தை பெயருக்கும் பட்டா மாற்றிக் கொண்டது தெரியவந்தது. அதன் பிறகு மற்ற சமூகத்தினரான சேலம் மாடர்ன் தியேட்டர் குடும்பத்தாருக்கும், அதை தொடர்ந்து மற்ற சிலருக்கும் விற்பனை செய்யப்பட்டு இறுதியாக குணசேகரனுக்கு வந்து சேர்ந்தது தெரியவந்தது.
1979 ஆம் ஆண்டு தமிழக அரசால் மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கள், விளைநிலங்கள் எதையும் மற்ற சமூகத்தினர் விலை கொடுத்து வாங்க உரிமை இல்லை என்றும் அந்த சமூகத்தினர் மட்டுமே அந்த நிலத்தை பயன்படுத்த முடியும் என்றும் அப்படி வாங்கினாலும் அது செல்லாது என்றும் உத்தரவிட்டு அரசு ஆணை பிறப்பித்தது. இதனால் ஆவணங்களை வைத்துப் பார்த்தபோது அந்த நிலத்தை வைத்துள்ளவர்கள் மலைவாழ் மக்கள் அல்ல என்பது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரன் மற்றும் தமிழ்நாடு மக்கள் கட்சி நிறுவனர் ராமசாமி இருவரும் கூட்டாக வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக குணசேகரன் என்பவர் தர்மபுரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் அதனால் அந்த நீதிமன்றம் தீர்ப்பு வரும்வரை,அந்த நிலத்திற்கு இவர்கள் யாரும் உள்ளே நுழையக் கூடாது என கடந்த மாதம் தடை ஆணை பிறப்பித்தது.
1937 இல் அந்த கிராமத்தில் இருந்து வெளியேறிய மலைவாழ் மக்கள் தற்போது சிலர் தங்கள் வாழ்வதற்கு பல்வேறு இடங்களில் இருக்கின்றனர். இதையடுத்து அவர்கள் வாழ்ந்த அம்மாபேட்டை மலை கிராமம் கண்டு பிடிக்கப்பட்டதை, அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த பேரப்பிள்ளைகள்,மகன்கள் மீண்டும் அம்மாபேட்டை மலை கிராமத்தில் குடிசை போட்டு, தாத்தா சொத்து பேரனுக்கு, அப்பா சொத்து மகனுக்கு என்று மகிழ்ச்சியில் அவரது முன்னோர்கள் வணங்கிய கோவிலை கண்டுபிடித்து, சுத்தம் செய்து வணங்கி குடியேறி வருகின்றனர்.
மேலும் முன்னோர்கள் பயன்படுத்திய கிணற்றை சொந்த செலவில் தூர்வாரி, மோட்டார் அமைத்து அவர்களுக்கு தேவையான குடிநீரை அவர்களே ஏற்பாடு செய்துள்ளனர். அதைப்போல் இந்த நிலத்தை எங்களுக்கு வீட்டு மனை பட்டாவாக அரசு வழங்கி, மின் இணைப்பு, சாலை வசதி, குடும்ப அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை இந்த விலாசத்திற்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் வந்த கதை போல் காணாமல் போன கிராமம் மீண்டும், 82 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து, அதே கிராமத்தில் குடியேறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், ஆச்சரியம், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல்கள் : சே.விவேகானந்தன், செய்தியாளர்- தருமபுரி