திமுக கூட்டணி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வென்று நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியுள்ளது. கூட்டணியில் பிரதானமாக உள்ள திமுகவின் வேட்பாளர்கள் கூட பெறாத ஒரு பிரமாண்ட வெற்றியை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் பெற்றுள்ளார்.
முதல்முறையாக தேர்தல் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?
இதனால், அவரின் வெற்றி வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது. பாஜக வேட்பாளர் பால கணபதியைவிட 5,72,155 வாக்குகள் அதிகம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பாலகணபதி 2,24,801 வாக்குகள் பெற்று 2ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,904 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
திருவள்ளூர் தனித்தொகுதியில் 4 முனை போட்டி நிலவியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் களமிறக்கப்பட்டார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 13 பேரையும் டெபாசிட் இழக்க வைத்திருக்கிறார்.
கர்நாடக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த 2019ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, தமிழக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்தாண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை களப்பணியாற்றிய அதேவேளையில், காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் வெற்றிக்காக களமாடினார்.
தற்போது பெற்ற வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிப்பதாக சசிகாந்த் செந்தில் புதியதலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்திக்கு மிக நெருக்கமானவர் என அறியப்படும் சசிகாந்த்தின் வெற்றிக்கு திமுக கூட்டணி பெரும் பலத்தை தந்திருக்கிறது என்றே கூறலாம்.
இது ஒருபுறமிருந்தாலும் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வலுவாக அமையாததும் இவரின் மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது. அதிமுக நேரடியாக களமிறங்காதது, பாஜக வேட்பாளர் பாலகணபதி வெளியூர்க்காரர் போன்றவை இவருக்கு பிளஸ் பாயிண்ட்களாக அமைந்தன.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 2009ஆம்ஆண்டு தனித்தொகுதியாக பிரிக்கப்பட்டதுதான் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி. அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக திகழ்ந்த திருவள்ளூரில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த 2 தேர்தல்களிலும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.