“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ஏற்கெனவே இரண்டு முறை அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரவையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்தும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்றும் அதில், சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும், சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படும் என்று செய்திகள் உலா வந்தன.
இதில், யாருடைய அமைச்சர் பதவியை பறித்துவிட்டு யார் புதிய அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார்; எந்தெந்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட உள்ளன என பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். பின் செய்தியார்களை சந்தித்த அவர், “அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது முதல்வருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இது குறித்து நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்” என நாசுக்காக நழுவிக் கொண்டார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து அறிவிப்பொன்று நேற்று வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவும் எம்.பி டி.ஆர்.பாலுவின் மகனுமாக டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய அமைச்சர் பதவியேற்பு விழா வரும் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
* டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில் துறை
* பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத் துறை
* தங்கம் தென்னரசுக்கு நிதித் துறை மற்றும் மனித வளம் மேலாண்மை துறை
* மனோ தங்கராஜூக்கு பால்வளத் துறை
பொறுப்புகள் கொடுக்கப்பட இருப்பதாகவும், இவர்கள் நாளை பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை பதவியேற்பு விழா முடிந்த உடன் இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.
* அதேபோல் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக சேகர்பாபு நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.