போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன?
போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
போக்குவரத்து சங்கங்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள், 12ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிந்த நிலையில், 50 சதவிகித ஊதிய உயர்வுடன் 13ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை 2 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 70 சதவீதப் பேருந்துகள் இயக்க முடியாத நிலையில் இருப்பதால் இவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்றும் ஒப்பந்த அடிப்படையில் 240 நாட்கள் பணி புரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பஞ்சப்படி வழங்க வேண்டும் என்றும் 2003-ம் ஆண்டுக்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒய்வூதியம் வழங்க பட்டியலில் இணைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துநர் தவிர மற்ற பணிகளில் வாரிசுகளுக்கும் வேலை வழங்க வேண்டும் எனவும் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளுக்கும் காப்பீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஓய்வுகால பணப்பலன்கள் முறையாக கிடைக்க குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.