தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை என்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தீபாவளி முன்பணம் மற்றும் தொழிலாளர் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 4ஆம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொ.மு.ச, சிஐடியு உள்ளிட்ட12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன், தொழிலாளர் நல துணை ஆணையர் பாலசுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொழிலாளர் நிலுவைத் தொகை, தீபாவளி முன்பணம், அகவிலைப்படி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து சுமூக தீர்வு எட்டப்படாததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. தீபாவளி பண்டிக்கைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லையெனில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.