திட்டக்குடியில் தீக்குளிக்க முயன்றவரை தடுக்க சென்ற காவல்நிலைய ஆய்வாளர் மீது பெட்ரோல் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தர்ம குடிகாடு பகுதியில் 45 க்கும் மேற்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு மூலம் இலவச மனைப்பட்டா வேண்டுமென அவர்கள் வசிக்கும் பகுதியின் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தை 20 ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அந்த நிலம் தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அந்த இடத்தை தங்களுக்கு வழங்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த ராஜா என்ற மாற்றுத்திறனாளி தனது மீது பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற திட்டக்குடி காவல் நிலைய ஆய்வாளர் அன்னக்கொடி, ராஜாவிடம் இருந்த பெட்ரோலை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது ராஜா, தன் மீது பெட்ரோல் ஊற்றுவதை தடுக்க வந்த காவல் ஆய்வாளர் மீதும் பொட்ரோலை ஊற்றியதால் ஆய்வாளரின் கண் மற்றும் உடல்களில் எரிச்சல் அதிகமானது. இதையடுத்து உடனடியாக அவரை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.