திருநங்கை ஆராதனாவின் ஆசை நிறைவேறுமா? அவர் கனவான போலீஸ் வேலை அவருக்கு கிடைக்குமா?
மாற்று பாலினத்தவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் அளித்தாலும் அது சரியான காலகட்டத்தில் அவர்களை சென்றடைவதில்லை. பலர் இன்னமும் சமுதாய பேச்சுக்கும் கேலிக்கும் ஆட்பட்டு, தங்களின் கனவுகளை சிதைத்துக்கொள்கிறார்கள். ஒரு சிலர், அவர்களைத்தாண்டி சாதித்தும் காட்டுகிறார்கள். அவ்வாறு சாதிக்கத்துடிக்கும் ஒரு திருநங்கை தான் ஆராதனா... தேனியை சேர்ந்த திருநங்கை ஆராதனா சிறு வயதில் தாயை இழந்தவர். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து, காவலர் ஆக விருப்பம்கொண்டு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தகுதி தேர்வு எழுதினார், பிறகு உடல் தகுதி தேர்வுக்கு பல போராட்டங்களுடன் எதிர்க்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆராதனா,
”நான் திருநங்கை ஆராதானா. நான் 2018ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வுக்கு அப்ளை செய்திருந்தேன். நான் திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக என்னுடைய அப்ளிகேஷனை ஆன்லைனிலேயே நிராகரிச்சுட்டாங்க. ’அனைவருக்கும் அனைத்தும்’னு சொல்ற இதே சமுதாயத்துலதான் நாங்களும் திருநங்கைகளா வாழ்ந்துட்டு இருக்கோம். எங்களுடைய உரிமைகள் ஏன் இப்படி மறுக்கப்படுது? ஏன் இப்படி எங்களை ஒதுக்குறாங்க. எல்லாரையும்போல படிச்சு வேலைக்குப் போகத்தானே நாங்களும் நினைக்கிறோம். காலத்துக்கும் நாங்க பாலியல் தொழில் பண்ணனும், பிச்சை எடுக்கணும்.. இதுதான் உங்களுடைய விருப்பமா?
நான் கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளா தொடர்ந்து போராடிட்டு இருக்கேன். ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு போய் எங்களுக்கான தீர்ப்பை கொடுக்கறாங்க. ஆனால் போன அரசும், இந்த அரசும் அதை செயல்படுத்த மாட்டேங்குறாங்க. நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவள். தேனியில இதுவரை மொத்தம் 5 கலெக்டர்கள் மாறிவிட்டார்கள். 5 பேர்கிட்டையுமே நான் 5 முறை போய் மனு கொடுத்திருக்கேன். எங்க ஊருக்கு வர அமைச்சர், எம்.எல்.ஏன்னு எல்லார்க்கிட்டையும் மனு கொடுத்திருக்கேன். சென்னைக்கும் பலமுறை வந்திருக்கேன். உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெரியசாமி ஐயாவை பார்த்து மனு கொடுத்திருக்கேன். அண்ணா அறிவாலயம், தலைமை செயலகம்ன்னு அலைஞ்சிருக்கேன். ஆனா ஒரு தீர்வும் கிடைக்கல. இதனால மன உளைச்சலாகி 4 - 5 முறை தற்கொலை முயற்சி கூட பண்ணிருக்கேன்.
நான் என்ன கேட்குறேன்? வேலைக்கு போகணும்னு தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். எல்லாரும் போலீஸ் தேர்வுக்கு அப்ளை பண்ணும்போது மார்க் ஷீட், ஆதார் கார்டுன்னு இணைப்பாங்க. ஆனா நாங்க திருநங்கைன்னு அடையாளக் கார்டு, திருநங்கை அறுவைசிகிச்சை பண்ணின கார்டுன்னு ஏகப்பட்ட விதிமுறைகள் எங்களுக்கு இருக்கு.
கஷ்டப்பட்டு எல்லாத்தையும் வாங்கி ஒருவழியா தேர்வுக்கு அப்ளை பண்ணினா, முன்னேறலாம்னு பாத்தா ஏதாவது ஒரு வழில தடுக்கிவிட்டு மறுபடியும் மூளைல உட்கார வெச்சுடறாங்க. இதே நிலைமை தொடர்ந்தா நாங்க என்னதான் பண்ணுறது? எங்க வாழ்வாதாரத்துக்கு எதுவுமே இல்ல. பெற்றவங்கனாலேயும், சமுதாயத்தாலேயும் புறக்கணிக்கப்பட்டு, இன்னும் ஒரு இடத்துல நாங்க வாழ்ந்துட்டுத்தான் இருக்கோம்.
நீங்க ஏன் அரசுத்துறைல மட்டும் வேலை கேட்குறீங்க? ஏன் தனியார் துறைல வேலை கேட்க மாட்டிங்குறீங்கன்னு கேட்குறாங்க.. அரசாங்கம் எங்களை அனுசரிச்சாதான் சமுதாயம் எங்களை ஏத்துக்கும். சமுதாயம் ஏத்துக்கிட்டாத்தான் பெற்றோர் எங்களை ஏத்துக்குவாங்க. எங்க வாழ்க்கையே இன்னும் கேள்விக்குறியாத்தான் இருக்கு. நடக்குற அரசாங்கம் எல்லாருக்கும் எல்லாமே பண்ணுறோம்னு சொல்றாங்க. அவங்களைத்தான் நாங்க பெருசா நம்பியிருக்கோம். நாங்க விரும்புற போலீஸ் வேலைய எங்களுக்கு போட்டுத்தர கேட்டுக்கறோம்” என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.