மதுரை போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தின் ரயில் வரவேற்பு விழா நடந்த தேனி ரயில்வே நிலையத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி மாலை 6 மணிக்கு கடந்து இரவு வந்தும் தேசியக்கொடி கீழ் இறக்கப்படாமல் விடியவிடிய பறந்தது.
மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை 90.4 கி.மீ தூரமுடைய வழித்தடத்தில் தற்போது தேனி வரையிலும் உள்ள 75 கி.மீ தூரமுடைய பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து மதுரை தேனி ரயிலை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் காணொளி காட்சி வாயிலாக கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதையொட்டி தேனி ரயில் நிலையத்தில் வரவேற்பு விழா நடந்தது. தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் தேனி - அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ்.ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்காக ரயில் நிலையம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ரயில் நிலையத்தின் முகப்பில் பிரம்மாண்டமான தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து விழா 6 மணிக்கு மேல் துவங்கியது. அப்போதும் தேசியக்கொடி கிழே இறக்கப் படவில்லை. விழா நடந்து முடிந்த 8.30 மணியை தாண்டியும் தேசியக்கொடி கீழே இறக்கப்படாமல் இரவிலும் பறந்து கொண்டிருந்தது.
இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதோடு தேசிய கீதம் இசைக்காமலும் விழா நிறைவு பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், மாலை 6 மணிக்கு மேல் தேசிய கீதம் இசைக்கப்படாது என விளக்கமும் அளிக்கப்பட்டது.