உணவில் மயக்க மருந்து.. ரயிலில் கொள்ளை.. மோசடி திருடன் சென்னையில் கைது..!

உணவில் மயக்க மருந்து.. ரயிலில் கொள்ளை.. மோசடி திருடன் சென்னையில் கைது..!
உணவில் மயக்க மருந்து.. ரயிலில் கொள்ளை.. மோசடி திருடன் சென்னையில் கைது..!
Published on

ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து திருடும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம், மேற்குவங்கம் உள்பட 10 மாநிலங்களில் கைவரிசைக் காட்டியவர் சென்னையில் சிக்கியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அமித்குமார், கடந்த மாதம் 18-ஆம் தேதி ஹவுரா ரயிலில் சென்னை வந்து கொண்டிருந்தார். சாப்பாட்டை எடுத்து இருக்கையில் வைத்துவிட்டு கை கழுவச் சென்ற அமித்குமார் மீண்டும் வந்து உணவை உட்கொண்டார். அதன் பிறகு என்ன நடந்தது என்றே அவருக்குத் தெரியாது. 3 நாள்களுக்குப் பின் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கண் விழித்தார்.

திரைப்படத்தில் மயக்கத்திலிருந்து எழுபவர்கள் நான் எங்கிருக்கிறேன் எனக்கேட்பது போன்றே அமித்குமாரும் கேட்டுள்ளார். ஹவுரா ரயில் பெட்டியில் மயங்கிக் கிடந்தவரை மருத்துவமனையில் சேர்த்ததாகக் கூறியது காவல்துறை. தான் அணிந்திருந்த நகை மற்றும் வைத்திருந்த பணத்தை காணவில்லை என அமித்குமார் தெரிவித்த போதுதான், இது மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடிப்பவரின் கைவரிசை என்பதை காவல்துறை தெரிந்து கொண்டது.

ரயிலில் தனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் மீது சந்தேகம் இருப்பதாக அமித்குமார் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். உடனே விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். டிக்கெட் கவுன்ட்டரில் பயணச்சீட்டு வாங்கிய ஒருவரின் நடவடிக்கைகைள் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அந்த நபரின் வீடியோவை அமித்குமாரிடம் காட்டிய போது அவர்தான் தன் அருகில் அமர்ந்திருந்தவர் என அடையாளம் காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நபரின் பெயர் சுபாங்கர் சக்கர போர்தி என்பதும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் சென்னையில் இருந்து மேற்குவங்கத்திற்கு தப்பிவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்கு செல்ல திட்டமிட்ட நிலையில் சுபாங்கர் சென்னைக்கு வரும் தகவல் கிடைத்தது. வேலை மிச்சம் என ஹவுரா ரயிலுக்காக காத்திருந்தனர் தனிப்படை அதிகாரிகள். எந்த ஹவுரா ரயிலில் அமித்குமாரிடம் கைவரிசைக் காட்டினாரோ அதே ஹவுரா ரயிலில் வந்து காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டார் சுபாங்கர் சக்கரபோர்தி.

சுபாங்கர் சக்கர போர்தி தமிழகம், மேற்குவங்கம் உள்பட 10 மாநிலங்களில் கைவரிசைக் காட்டியுள்ளார். ரயிலில் பயணிக்கும் சுபாங்கர், சக பயணிகளிடம் நல்லவர் போல் பேசிப் பழகுவார். சக பயணிகள் கழிவறைக்குச் செல்லும் போது அவர்கள் வைத்திருக்கும் உணவில் மயக்க மருந்து கலப்பதுதான் சுபாங்கரின் ஸ்டைல் என்கிறது காவல்துறை. உணவில் கலக்க முடியாவிட்டால் தேநீர், காபி, பிஸ்கட் போன்றவை சுபாங்கரின் அடுத்தடுத்த அஸ்திரங்கள். அவரிடமிருந்து மயக்க மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com