செய்தியாளர்: G.மாதவன்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (43). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். புழுதிக்குடி டாஸ்மார்க் மதுபான கடையில் பணியாற்றி வந்த இவருக்கு களப்பால் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையிலும் கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக பணிக்கு செல்லாமல் கடும் மன உளைச்சலில் இருந்த இவர், குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டின் பின்பக்கம் தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது மனைவி, கணவர் தற்கொலை செய்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாபு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பாபு எழுதியுள்ள ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில், ‘எனது தற்கொலைக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் களப்பாலில் உள்ள மூன்று டாஸ்மாக் ஊழியர்கள்தான் காரணம்’ என அவர் எழுதியிருக்கிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.