செய்தியாளர்: ஜி.பழனிவேல்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கரீம் சாகிப் தெருவைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் (70) - பாலம்மாள் (65) தம்பதியர். இருசக்கர வாகனத்தில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வந்த நாகராஜ், தனது மகள் துளசியம்மாள் வீட்டின் மாடியில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நாகராஜூக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மது அருந்தவோ, சிகரெட் பிடிக்கவோ கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், நாகராஜ் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய நாகராஜின் பேத்தி, தாத்தாவை தேடி மாடிக்குச் சென்றுள்ளார்.
அப்போது வீடு உள்பக்கமாக தாழிட்ட நிலையில் இருந்துள்ளது. பலமுறை அழைத்தும், யாரும் வெளியில் வரவில்லை என்பதால், ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, வீட்டினுள் ரத்தக்கறை இருந்ததைப் பார்த்து அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, பாலம்மாள் சடலமாக இருந்த நிலையில், நாகராஜூம் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த பர்கூர் போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பாலம்மாள் - நாகராஜ் இடையே மோதல் ஏற்பட்டதில், நாகராஜ் தாக்கியதில் பாலம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பதும், அதனை அறிந்த நாகராஜ் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது என கூறப்படுகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.