செய்தியாளர்: குமரவேல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விக்கேஷ் (28). இவரது மனைவி சுரேகா (23). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கர்ப்பிணியாக இருந்த சுரேகாவிற்கு கடந்த 23ம் தேதி பிரவச வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இதில் ஒரு குழந்தை எடை குறைவாக இருந்ததால் 2 குழந்தைகளையும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். பின் ஒரு குழந்தையை 2 நாட்களுக்கு முன்பு தாய் சுரேகாவிடம் கொடுத்துள்ளனர். மற்றொரு குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (30.09.2024) மாலை 5.30 மணியளவில் பிரவச வார்டில் உள்ள 4 வது மாடியில் இருந்து குதித்து சுரேகா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பிரவச வார்டு கட்டிடத்தின் போர்டிகோ மீது விழுந்த சுரேகாவை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு அங்குள்ள அவரச சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு செல்லும் கதவு எப்படி திறக்கப்பட்டிருந்தது என மருத்துவமனை நிர்வாகத்திடம் நாம் கேட்டபோது, “பிரசவ வார்டில் உள்ள தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுதாகி உள்ளது. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததால் மொட்டை மாடியில் கதவு திறக்கப்பட்டு இருந்தது. மேலும் சுரேகா நான்காவது மாடியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அவரோடு சம்பவத்தின்போது அவரது தாயும் இருந்துள்ளார்” என தெரிவித்தனர். இதையடுத்து சுரேகாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதுபற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.