செய்தியாளர்:L.M. ராஜா
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேசுராஜ். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நியோ மெக்ஸ் நிதி நிறுவனத்தில் ரூபாய் 10 லட்சம் முதலீடு செய்திருந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார். இந்நிலையில் இவர் முதலீடு செய்த பணம் கடந்த 2022ல் முதிர்வடைந்த நிலையில், இவரது மகன் ஃபெலிக்ஸ் ராஜா (35) சம்மந்தப்பட்ட நியோ மெக்ஸ் நிதி நிறுவனத்திற்கு பலமுறை சென்று அங்குள்ளவர்களிடம் பணத்தை கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் வரும் 2025 ஆம் ஆண்டு 10 லட்சம் ரூபாயை 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக உங்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் நடைமுறையை பார்க்கும்போது ஃபெலிக்ஸ் ராஜாவிற்கு திருப்திப்படவில்லை. இதனால் எனக்கு இரட்டிப்பாக பணம் வேண்டாம். ’நாங்கள் முதலீடு செய்த பணத்தை எங்களுக்கு தந்தால் போதும்’ என்று பலமுறை கேட்டும் அவர்கள் பணம் தரவில்லை எனத் தெரிகிறது. மேலும் கடைசியாக அவர் பணம் கேட்கும்போது, ஃ பெலிக்ஸ் ராஜாவை அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பணம் தர முடியாது என்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஃபெலிக்ஸ் ராஜா விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து இவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ஃபெலிக்ஸ் ராஜாவின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதனர்.
இதையடுத்து நியோ மெக்ஸ் நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், ஃபெலிக்ஸ் ராஜாவை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்துதர வேண்டும். காவல்துறையும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த நியோ மெக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நல சங்கத்தினர். வழக்கு தொடர்ந்து அவர் முதலீட்டில் செய்த பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும்,இந்த குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் நிதி உதவி கொடுத்து உதவினர். இந்த சம்பவம் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.