நடன கலைஞரான ரமேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.
தன்னுடைய நடனத்தால் சமூக வலைதளங்களில் பிரபலமான நடனக் கலைஞரான ரமேஷ், சமீப காலமாக தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்துள்ளார். தற்போது வெளியான நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்திலும் நடத்திருந்தார்.
நடன கலைஞர் ரமேஷிற்கும் அவரது முதல் மனைவியான சித்ராவிற்கும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி இன்பவள்ளியுடன் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கேபி பூங்கா குடியிருப்பில் அவர் வாழ்ந்து வந்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இன்றைய தினம் தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது முதல் மனைவியையும், மகள்களையும் பார்த்துவிட்டு வருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி இன்பவள்ளி, ரமேஷை தடுத்து நிறுத்தி சண்டை போட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் மாலை 5 மணி அளவில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து, ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட சம்பவ இடத்தில் உடலை நேரில் பார்த்தவர்கள், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த இடத்தில் ரத்தம் இல்லாத நிலையில் தான் உடல் கிடந்தது என கூறியிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து முதல் மனைவியான சித்ரா, அருகில் இருக்கும் பி4 பேசின் பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் P4 பேசின் பாலம் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.