போக்குவரத்து, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு க்யூஆர் கோடு (QR Code) பொருந்திய பேடிஎம் (Paytm) கருவி மூலம் அபராதம் வசூலிக்கும் திட்டத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு QR Code மற்றும் Paytm மூலம் வசூலிக்கும் அட்டைகளை மாநகர காவல் ஆணையர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலை விதிகளையும், போக்குவரத்து விதிகளையும் மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதத் தொகையை வசூலிப்பது சிக்கலாகவே இருந்து வந்ததாகவும், தற்போது இந்த க்யூஆர் கோடு (QR Code) பொருந்திய பேடிஎம் (Paytm) கருவி மூலம் அபராதத் தொகையை வசூல் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் முதல்கட்டமாக 300 இடங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும், தற்போதைக்கு 356 பேடிஎம் (Paytm) இயந்திரம் மட்டுமே இருப்பதாகவும், இந்தத் திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்து விரிவுப்படுத்த இருப்பதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் தற்கொலை முயற்சி செய்த விவகாரத்தில் முதல் கட்ட விசாரணை நடந்து வருவதாக தெரிவித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்ற மூன்று காவலர்களுக்கு பாராட்டுகளை கூறியுள்ளார்.