பூந்தமல்லி போலீஸ் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரை சாலையை உடைத்து அகற்றுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் கோயில் தெருவில் உள்ள போலீஸ் குடியிருப்பு மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக முதல்வர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் இந்த பகுதியை ஆய்வு செய்து மழை நீரை அகற்றும் படி உத்தரவிட்டனர்.
ஆனால் இங்கிருந்து மழை நீரை வெளியேற்ற போலீசார் மெத்தனம் காட்டிய நிலையில், போதிய வசதி இல்லாத காரணத்தால் தற்போது அவசர கதியில் குமணன்சாவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் ஒரு பகுதியின் சாலையை உடைத்து அதன் வழியாக பைப்புகள் அமைத்து மின் மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக குமணன்சாவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.