’இதை மட்டும் செய்யுங்களேன்!’.. சுற்றுலா பயணிகளை கவரும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள்!

’இதை மட்டும் செய்யுங்களேன்!’.. சுற்றுலா பயணிகளை கவரும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள்!
’இதை மட்டும் செய்யுங்களேன்!’.. சுற்றுலா பயணிகளை கவரும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள்!
Published on

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் லகூன் பகுதியை சுற்றுலாத் தலமாக  மேம்படுத்த  சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட அலையாத்திக் காடுகள் உள்ளன. இருபுறமும் மரம் சூழ்ந்த ஆற்றின் குறுக்கே படகில் நெடுதூரப் பயணம் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து கிடக்கும் அலையாத்தி காடுகளின் இயற்கை அழகு நம்மை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகள் அழகாக அமைந்துள்ளது

இக்காடுகள் வெப்பமண்டல, மிதவெப்பமண்டல காடுகளாக உப்பங்களிகள் காணப்படும் பகுதியில் உருவாகின்றன. பல்வேறு வகை நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்திக் களமாகவும், கடற்கரையோர நிலப்பகுதிகளின் பாதுகாப்பு அரணாகவும் இக்காடுகள் அமைந்துள்ளன. உலக அளவில் இக்காடுகள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் ஏறத்தாழ 30 நாடுகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய காடுகள் 4,827 சதுர கி.மீ பரப்பளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோர பகுதிகளிலும், அந்தமான் தீவு கூடங்களிலும் இக்காடுகள் வளர்கின்றன. புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.

மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவேரி ஆற்றுப் படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது. இதன் இடையில் உள்ள முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் தெற்கு எல்லையாக பாக்ஜல சந்தியையும், வடக்கு களிமண் உப்பளத்தையும் கொண்டுள்ளது.

மொத்தம் ஆறு வகையான சதுப்பு நிலத் தாவரங்கள் அதாவது அலையாத்தி, நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, தீப்பரத்தை மற்றும் சுரபுன்னை போன்ற தாவரங்கள் காணப்படுகிறன்றன. இவற்றில் அலையாத்தி மரம் முதன்மையான தாவரமாக காணப்படுகிறது. இது மொத்த சதுப்புநில தாவரங்களில் எண்ணிக்கையால் 95 சதவீதத்திற்கு மேலாக காணப்படுகிறது. மேலும் 147 சிற்றின வகை பறவைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிக அதிகமாக பூநாரை, கூளக்கடா, நீர்காகம், ஊசிவால் வாத்து, குளத்து கொக்கு, வெண்கொக்கு போன்றவை இப்பகுதிக்கு வருகின்றன. மேலும் ஓநாய், மர நாய், கீரி, பழந்தின்னி, வெளவ்வால்கள், காட்டு முயல் போன்ற 13 வகை பாலூட்டிகள் உள்ளன.

இந்தியாவில் முதன்முதலாக முத்துப்பேட்டை பகுதியில் மட்டும்தான் அலையாத்தி காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மரம் நடப்பாதைகள், உயரக் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள் காட்டுக்குள் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகள் பேருந்தில் திருவாரூர் வழி மார்க்கமாக முத்துப்பேட்டையை வந்தடையலாம். மேலும் நகர் பகுதியான முத்துப்பேட்டையில் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது.இப்பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அலையாத்திக் காடுக்கான படகு சவாரி உள்ளது.

காலை 8மணி முதல் மாலை 5மணி வரை செயல்படும்.சுற்றுலா பயணிகள் இந்த அழகை ரசித்து செல்ல முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் பயணம் தொடர்பான தகவல்களை தெரிவித்து முன் அனுமதியும், நேரில் வந்தும் அனுமதியும் பெறலாம்.

பின்னர் சுற்றுலா பயணிகள் எந்தவித அச்சமும் பயமும் இன்றி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 10 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய படகில் வனக்காப்பாளர் பாதுகாப்புடன் சென்று அலையாத்திக் காடுகளின் அழகை ரசித்து வரலாம். படகில் 10 நபர்கள் சென்று வர ரூ.1,500 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. மேலும் இந்த காடுகளின் அழகை ரசிப்பதோடு அதை பாதுகாப்பதும் அவசியம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை தரும் போது பாலித்தீன் பைகள், எளிதில் தீ பற்றக்கூடிய பொருள்கள், மற்றும் அங்கு சென்று சமைத்து சாப்பிடுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும்  இதுகுறித்து சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் கூறுகை‌யி‌ல், முத்துப்பேட்டை இருந்து படகு சவாரி செல்லும் இடத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. அதனை சரி செய்து தர வேண்டும். படகு சவாரி தளத்தில் பயணிகள் அமர்வதற்கு செட் அமைத்து சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி செய்து தர வேண்டும். கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது  இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கோரிக்கையாக உள்ளது. மேலும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடு லகூன் பகுதியை தமிழக அரசு மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com