ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளால், அதனை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல். இங்கு தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால், விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் வெறிச்சோடி கிடந்த ஒகேனக்கல், சுற்றுலா பயணிகளால் களை கட்டியது.
இதனால் மெயின் அருவி, சினியருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. மேலும் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும் அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், மீன் சமைத்தும் உண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.