“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சென்ற வேனை டிரைவர் குருமூர்த்தி (28) என்பவர் இயக்கியுள்ளார். கொல்லிமலையில் உள்ள மாசிலா அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்துவிட்டு செங்கரை வழியாக ஊருக்கு திரும்ப முடிவுசெய்திருக்கிறார் குருமூர்த்தி.
அதன்படி ஊருக்கு திரும்புகையில், இரவு நேரத்தில் மலைப்பாதையில் இருந்து கீழே இறங்கியுள்ளது வேன். அப்போது சித்தூர்நாடு மேல் பூசணிகுளிப்பட்டி அருகே கொண்டை ஊசி வளைவில் வாகனத்தை திருப்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அப்படியே தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சென்ற செங்கரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, அவர்களை கொல்லிமலை அடிவார பகுதியான சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அவர்களை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இவ்விபத்தில் ஜானகி என்ற பெண்ணுக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அசோக்குமார், வெங்கடேஷ், மலர் என்பவர்கள் உட்பட மேலும் சிலரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், ஆத்தூர் வட்டாட்சியர் மாணிக்கம் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்தனர்.