பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வந்து சென்றதை அடுத்து அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நேற்று அலைமோதியது. ஆனால், புராதனச் சின்னங்களில் உள்ள மின்விளக்குகள் இரவில் எரியாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் மிக்க மாமல்லபுரம் இது நாள் வரையில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்தது, 'மாமல்லபுரத்தை கண்டே தீரவேண்டும்' என்ற எண்ணத்தை அனைவரிடமும் விதைத்துவிட்டது. அன்றைய நாளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மாமல்லபுரம் பிரகாசமாக காட்சி அளித்தது.
அதனால்தான் தலைவர்களின் சந்திப்பு முடிந்து அனுமதி வழங்கப்பட்ட உடனேயே மாமல்லபுரத்தை பார்வையிட மக்கள் குவிந்து வருகின்றனர். மோடியும் ஷி ஜின்பிங்கும் சென்ற பகுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்கின்றனர்.
பகல் நேரத்தைப் போலவே இரவில் வண்ண விளக்குகளில் மின்னும் புராதன சின்னங்களைப் பார்வையிட ஏராளமானோர் கூடியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அங்கிருந்த மின் விளக்குகள் ஏதும் ஒளிராததைக் கண்டு சுற்றுலா பயணிகள் சோகமடைந்தனர். அர்ச்சுனன் தபசு போன்ற கலைப்படைப்புகளை ஒளிவெள்ளத்தில் காண, மாலை முதலே காத்திருந்த சிலர் ஆதங்கத்துடன் திரும்பிச் சென்றனர்.
இருநாட்டு தலைவர்கள் வந்தபோது செய்யப்பட்டிருந்த மின்விளக்கு ஏற்பாடுகள், நிரந்தமாக இருக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இரவு 9 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிட மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் மின்விளக்குகள் ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.