பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார். கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகங்கள் மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மீன்வளப்பல்கலைக்கழகம், சட்டப்பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ளிட்டவைகளின் துணைவேந்தர்கள் 17 பேர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசின் ''ருசா'' திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபாய் எந்தெந்த வழிகளில் செலவு செய்யப்பட்டது என்பது குறித்தும், உயர்கல்வி மன்ற கூட்டத்தின் அறிக்கையையும் ஆளுநர் கேட்டறிந்தார். துணைவேந்தர்கள் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.தமிழகத்துக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் அளவுக்கு துணைவேந்தர்கள் பணியாற்ற வேண்டும் என துணைவேந்தர்கள் மத்தியில் ஆளுநர் பேசினார்.