கோயம்பேடு சந்தையில் ரூ.100-ஐ தொட்டது ஒரு கிலோ தக்காளி விலை! காரணம் என்ன?

கோயம்பேடு சந்தையில் ரூ.100-ஐ தொட்டது ஒரு கிலோ தக்காளி விலை! காரணம் என்ன?
கோயம்பேடு சந்தையில் ரூ.100-ஐ தொட்டது ஒரு கிலோ தக்காளி விலை! காரணம் என்ன?
Published on

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை ஏற்றத்தால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருக்கிறது.

மழைப்பொழிவு, தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களினால் கோயம்பேடு சந்தையில் 20வது நாளாக தக்காளியின் விலை தொடர்ச்சியாக இன்றும் அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தக்காளியிலேயே, நாட்டு தக்காளி நேற்று ரூ. 85 க்கு விற்பனையான நிலையில், இன்று அது ரூ. 95-க்கு விற்பனையாகிறது. நவீன் தக்காளி நேற்று ரூ. 90 க்கு விற்பனையாகிவந்த நிலையில், இன்று அது ரூ. 100-க்கு விற்பனையாகிறது. தக்காளி மட்டுமன்றி, இன்னும் பல காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. அந்தவகையில் நேற்று ரூ.110 என்று இருந்த பீன்ஸ் விலை, இன்று ரூ.120 என உயர்ந்துள்ளது. போலவே நேற்று ரூ.80 என்றிருந்த அவரைக்காய் இன்று ரூ. 90 என்றாகியுள்ளது.

சில்லறை விற்பனையை பொறுத்தவரை, கோயம்பேட்டில் நாட்டு தக்காளி நேற்று ரூ. 95 என்றிருந்த விலை, இன்று ரூ. 100 க்கு விற்பனையாகிறது. போலவே ரூ. 100க்கு நேற்று விற்பனையான நவீன் தக்காளி இன்று ரூ.110 க்கு விற்பனையாகிறது. மற்றொருபக்கம் நேற்று ரூ.120 விற்பனையான பீன்ஸ் இன்று ரூ.130 க்கும், நேற்று ரூ. 80க்கு விற்பனையான அவரைக்காய் ரூ. 90க்கும் விற்பனையாகி வருகிறது.

கோயம்பேடு சந்தையில் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 950 முதல் 1,050 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில் 15 முதல் 20 சதவீதம் அதிகரித்து விற்கப்படுகிறது. மே மாதத்தில் தொடக்கத்திலிருந்தே தக்காளியின் விலை ஏற்றமானது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கோயம்பேடு சந்தைக்கு 80% தக்காளி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அசானி புயலைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மழை பொழிவின் காரணமாக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு 80 லாரிகள் தக்காளி ஏற்றி வரும் நிலையில், தற்போது 30 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே தக்காளியின் தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com