கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தக்காளியின் விலை 100 ரூபாயைத் தொட்டுள்ள நிலையில் கூட்டுறவு பசுமை பண்ணைகள் மூலம் 70 முதல் 85 ரூபாய் வரை கிலோ தக்காளி வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் பசுமை பண்ணை கூட்டுறவு கடைகளில் ஒரு கிலோ தக்காளி 74 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மழைப்பொழிவு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் தக்காளியின் விலை கிலோவிற்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழையின் போது தக்காளி விலை அதிகரித்த நிலையில் தமிழகத்தில் உள்ள 65 கூட்டுறவு பசுமை பண்ணைகள் மூலம் தக்காளி 45 முதல் 55 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் தக்காளியின் விலை சந்தைகளில் வெகுவாக குறைந்தது. அதேபோன்று தற்போது தக்காளியின் விலை அதிகரித்து இருப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடி மூலம் சென்னை திருச்சி கோவை மதுரை உள்ளிட்ட இடங்களில் குறைந்த விலையில் தக்காளி விநியோகம் செய்ய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாள் ஒன்றுக்கு 4 மெட்ரிக் டன் தக்காளிகள் கொள்முதல் செய்யப்பட்டு, இன்று 80 முதல் 85 ரூபாய்க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள 11 பசுமை அங்காடிகளிலும் தக்காளி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 4 மெட்ரிக் டன்னுக்கு மேல் தக்காளி கொள்முதல் செய்யப்படும் என கூட்டுறவு துறை தெரிவித்துள்ள நிலையில் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைத்து விற்கப்படும் என பசுமை பண்ணை கூட்டுறவு அங்காடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தையில் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளை விட பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடியில் குறைவான விலையில் தக்காளி கிடைப்பதன் மூலம் வரும் நாட்களில் மக்கள் கூட்டம் இங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.