உளுந்தூர்பேட்டையை தொடர்ந்து விக்கிரவாண்டியிலும் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைப்பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
இதனால் பலரும் தங்களது சொந்த ஊருக்கு நேற்றிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர். நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.
இதனிடையே பலர் கார்களிலும் ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இன்று மாலை 6 மணிக்குள் ஊருக்கு சென்று விட வேண்டும் என்ற நோக்கத்திலேயே புறப்பட்டு சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி அருகே வாகன நெரிசல் ஏற்பட்டதால் அங்கு சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வாகன நெரிசல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுங்க கட்டணம் வசூலிக்கவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டையை தொடர்ந்து விக்கிரவாண்டியிலும் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சுங்க கட்டணத்தை இன்று ரத்து செய்ய வேண்டும் என ரவிக்குமார் எம்பி புதியதலைமுறை வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றக் கிளையும் சுங்க கட்டணம் வசூலை இன்று ஒருநாள் ரத்து செய்யலாமே என்ற கருத்தையும் முன்வைத்திருந்தது.