தமிழகத்தில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 28ஆம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்தது. ஆனால் இதைத்தொடர்ந்தும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் மழை பொழிவும் இருந்தது.
இந்நிலையில் இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தையொட்டி பகுதிகளில் வெயில் குறைந்து, மழைபொழிவு தொடங்கவுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.
அந்த வகையில் இன்றும் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை கடந்து சதம் அடித்துள்ளது. திருச்சியில் 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், மதுரை விமான நிலையத்தில் 102.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், வேலூர் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.