கறுப்புப் பண தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தடை கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாகவும் இதனை வருமானவரி கணக்கில் காட்டவில்லை என்றும் புகார் எழுந்ததை அடுத்து 3 பேர் மீதும் நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. கறுப்புப்பண தடுப்புச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு தடை கோரி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறப்பு நீதிமன்றம் அமைக்காத நிலையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. புகாரானது வழக்காக மாறுவதற்கு முன்பாகவே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.