ரமலான் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை நோன்பு கடைபிடித்து, ஏழை- எளியவர்களுக்கு உதவி செய்வது வழக்கம். வானில் தென்படும் பிறையின் அடிப்படையில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவில், இந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. தமிழகத்தில் ரமலான் பிறை கடந்த 9ஆம் தேதி தெரியாததால், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்தி கொண்டாடி வருகின்றன.
ரமலான் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.