இளமை பீறிடும் வசனங்களை எழுதி நடிக்கும் ரா.பார்த்திபனுக்கு இன்று வயது 67. உதவி இயக்குநராக இருந்த போதும், வசனகர்த்தாவாக பணியாற்றிய போதும் மூர்த்தியின் கனவு பெரிது. பின்னாளில் அவர் பார்த்திபன் ஆனார். அதன் பின்னர் தம் தந்தையின் பெயரையும் சேர்ந்து ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆனார்.
இயக்குநர் பாக்யராஜின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்களின் பார்த்திபனும் ஒருவர். 1984-ஆம் ஆண்டு பாக்யராஜின் நடிப்பில் வெளியான தாவணி கனவுகள் படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த போதே திரையுலகம் அவரை தனித்த அடையாளத்துடன் பார்க்கத் தொடங்கியது.
ஏரியா ரவுடியாக அறிமுகமாகி, இரண்டாவது பாதியில் குடும்பஸ்தனாக மாறும் கதை கொண்ட புதிய பாதை. இயக்குநராகவும், கதை நாயகனாகவும் ஒரே நேரத்தில் இரட்டை அவதாரமெடுத்த படம் அது. அன்றைய காலகட்டத்தில் 38 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது. திரையரங்குகள் ஹவுஸ் புல்லாகின. கதையம்சம் கொண்ட கலைநயமிக்க படைப்புகளை கொடுக்க முயன்ற போது, அவை வர்த்தக ரிதியாக தோல்வியை தழுவின.
உள்ளே வெளியே போன்ற மசாலா படங்களையும் தம்மால் எடுக்க முடியும் என வர்த்தக ரீதியாக வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார் பார்த்திபன். இவன், ஹவுஸ் புல், குடைக்குள் மழை, ஒத்த செருப்பு, இரவின் நிழல், கோடிட்ட இடங்களை நிரப்பு போன்ற கலைப்படைப்புகள் வணிக ரீதியாக வெற்றியைத் தரவில்லை என்றாலும் பார்த்திபனின் தனி முத்திரையாக அவை பெயர் பெற்றன. இதில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் தனி ரகமாக ஜொலித்து வெற்றி வாகை சூடியது.
பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு போன்று சேரன் உள்ளிட்ட பிற இயக்குநர்களின் படங்களிலும் பார்த்திபன் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதியமானின் சுவர்ணமுகி, செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களிலும் பார்த்திபனின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் போன்ற படம் ஒவ்வொரு நடிகனும் தம் வாழ்நாளில் நடிக்க வேண்டியது என பார்த்திபனே மெச்சினார். வைகைப்புயல் உடனான அவரது நகைச்சுவை காட்சிகளும் மனம்விட்டு சிரிக்க வைப்பவை...
கதைக்களத்தில் வெவ்வேறு குறுக்கீடுகள் உள்ளதை நான் லீனியர் திரைப்படம் என்பார்கள். அவ்வாறான நான் லீனியர் திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்தவர் இயக்குநர் ரா.பார்த்திபன் தான். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படமாக உள்ளது இரவின் நிழல்... ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதாளர்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இரவின் நிழல். இதேபோல் தமிழ் சினிமாவின் முதல் மோனா ஆக்ட் படமாக அமைந்தது ஒத்த செருப்பு சைஸ் 7.
கவிதை, இலக்கியம், மேடைப்பேச்சு, நெறியாள்கை ஆகியவற்றிலும் பார்த்திபன் கைதேர்ந்தவர். கிறுக்கல்கள் என்ற கவிதைத்தொகுப்பு ஒருகாலத்தில் அதிகம் பேசப்பட்டது. முதல் படமான புதிய பாதைக்கானது உள்பட 3 விருதுகளை பெற்றுள்ள பார்த்திபனின் கனவு இன்னமும் ஆஸ்கரை நோக்கித் தான்...