சாத்தூர் பெண் சிசுவுக்கு இன்று ஹெச்ஐவி பரிசோதனை..!

சாத்தூர் பெண் சிசுவுக்கு இன்று ஹெச்ஐவி பரிசோதனை..!
சாத்தூர் பெண் சிசுவுக்கு இன்று ஹெச்ஐவி பரிசோதனை..!
Published on

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, ஹெச்.ஐ.வி தொற்று உள்ளதா என்பதை கண்டறிய முதற்கட்ட மருத்துவ பரிசோதனை இன்று தொடங்குகிறது.

அரசு மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவினால், ஒரு பாவமும் அறியாத சின்னஞ்சிறு பெண் குழந்தை தனது வாழ்வோடு போராடத் தொடங்கியுள்ளது. 8 மாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவர் விருதுநகரில் உள்ள சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட அதிர்ச்சிகர உண்மை, பரிசோதனை மூலம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், ஜனவரி 17-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

தாயும், சேயும் நல்ல உடல்நலத்துடன் உள்ள நிலையில், குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கக்கூடும் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். அதனை கண்டறிவதற்காக குழந்தைக்கு Polymerase Chain Reaction எனப்படும் PCR வகை ரத்த பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட உள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ள குழந்தையின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, மருத்துவமனையின் டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட பரிசோதனைக்குப் பின், 6 மாதம் கழித்து மற்றொரு பரிசோதனையும், குழந்தையின் ஒன்றரை வயதில் 3-ஆவது பரிசோதனையும் நடத்தப்படும். இந்த 3 பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே, குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ளதா அல்லது இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வர முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒருவேளை முதல் பரிசோதனையிலேயே குழந்தைக்கு ஹெச்.ஐ.வி இருப்பது தெரியவந்தால், அதற்கேற்ற சிகிச்சைகள் உடனடியாக தொடங்குப்படும் என டீன் வனிதா தெரிவித்துள்ளார். பரிசோதனையில் நல்ல முடிவு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com