காரில் சென்ற பாஜக நிர்வாகிகளின் காரின் கதவை நகராட்சி ஊழியர் திறந்ததால் பாஜக நிர்வாகி கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நகராட்சி ஊழியருக்கும், பாஜக நிர்வாகிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க குளச்சல் நகராட்சியில் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு, நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.குறிப்பாக பேருந்துகளில் செல்லும் பயணிகள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கின்றனர். அபராதம் செலுத்த முடியாத சிலர் பேருந்திலிருந்து இறங்கி, நடந்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், தேர்தல் பரப்புரைக்காக பாஜக நிர்வாகிகள் நான்கு பேர் காரில் வந்தபோது, அவர்களை நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது காரின் ஓட்டுநர் முகக்கவசம் அணியாததால், அபராதம் செலுத்த வேண்டும் எனக்கூறி, நகராட்சி ஊழியர்கள் ரசீதை கொடுத்தனர். ஆனால் அபராதம் செலுத்த மறுத்து உடனடியாக காரை இயக்கினார்.
அப்போது, ஆவேசமடைந்த நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், ஓடும் காரின் கதவை திடீரென திறந்ததால், காரில் இருந்த நிர்வாகி கீழே விழும் நிலை ஏற்பட்டது. ஆனால், அவர் கையால் கதவை பற்றி கொண்டதால் காரில் இருந்து விழாமல் தப்பினார். அதனைத்தொடர்ந்து பாஜகவினருக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.