சீர்காழி அருகே மூன்று தலை முறைகளாக வவ்வால்களை பாதுகாக்க தீபாவளி அன்றும் வெடி வெடிக்காத பெரம்பூர் கிராமம். நிரந்தரமாக குடியேறிய வெளிநாட்டு பறவைகளையும் கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பெரம்பூர் கிராமம். விவசாயம் பூமியான இக்கிராமத்தில் உள்ள ஆலமரத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் நடுவே வயல்வெளியில் அமைந்துள்ள ஆலமரத்தில் வவ்வால்கள் வசிப்பதால் இப்பகுதியை வவ்வாளடி எனவும் அழைக்கின்றனர்.
இந்த வவ்வால்கள் வசிக்கும் பகுதிக்கு கிராமமக்கள் அனுமதியின்றி வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாது. வவ்வால்களை பாதுகாக்க இளைஞர்கள் கொண்ட வேட்டை தடுப்பு குழு ஒன்றை அமைத்து மூன்று தலைமுறைகளாக வவ்வால்களை பாதுகாக்கும் பெரம்பூர் கிராம மக்கள் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதையும் தடை செய்துள்ளனர்.
பட்டாசு சப்தத்தால் வவ்வால்கள் அச்சமடையும் என்பதால் இந்த கட்டுபாடு பல ஆண்டுகளாக உள்ளது. வழக்கம் போல் இந்த ஆண்டும் வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பாண்டிகையை கிராம மக்கள் கொண்டாடினர். வவ்வால்களை தங்கள் கிராமத்தை காக்கும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
சிரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பட்டாசு வெடிக்க ஆசைபட்டால் கூட அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று வயல் பகுதியில்தான் வெடிக்க வேண்டும் எனவும் பெரம்பூர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் பசுமை நிறைந்து காணப்படும் இக்கிராமத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகளும் வரத்து துவங்கியுள்ளன.
இதில் ஆஸ்திரேலியா நாட்டு பறவை இனங்களான வக்கா. பூ நாரை, நீர் காகம். வெள்ளை காகம் உள்ளிட்ட பறவைகள் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலும் தங்கி இனப்பெருக்கத்திற்கு பின் தன் குஞ்சுகளுடன் தாயகம் திரும்புவது வழக்கம். ஆனால் பெரம்பூர் கிராமத்தின் பசுமை சூழலால் கவரப்பட்ட பறவைகள் தற்போது நிரந்தரமாக இங்கேயே கூடுகள் அமைத்து தங்கிவிட்டது.
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் நூற்றுக்கணக்கில் பறவைகள் தங்கியுள்ளது. பறவைகளை எந்த இடையூரும் செய்யாமல் பாதுகாக்கும் கிராம மக்கள் வெளியாட்கள் வேட்டையாடுவதை தடுக்க வேட்டை தடுப்பு குழு அமைத்து பாதுகாத்து வருகின்றனர். தற்போது அறுவடை நடைபெறுவதால் வயல்வெளிகளில் ஆயிரகணக்கான பறவைகள் சிறகடித்து பறந்துவருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
பறவைகளை பாதுகாக்க இப்பகுதியில் ஒர் சரணாலயம் அமைக்க வேண்டும் என பெரம்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.