வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவில்லை என்றால் காடுகள் அழியும் சூழ்நிலை ஏற்படும் என்றும், வனப்பகுதியில் வணிக ரீதியாக விவசாயம் நடைபெறுவதை தடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாண்டி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம் 33% காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளது. வைகை அணைக்கு 2 இடங்களில் இருந்து தண்ணீர் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு செல்கிறது.
இதில் முக்கியமான ஒன்றாக மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. மேகமலை வனப்பகுதி எல்லைகள் கேரளாவிலுள்ள மலைப்பகுதி மற்றும் விருதுநகரிலுள்ள மலைப் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. இதனால் இப்பகுதியில் வன உயிரினங்கள் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக அரியவகை உயிரினங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறது. இப்பகுதியில் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 2292 ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் விவசாயத்திற்காக மரங்களையும் அப்பகுதியில் உள்ள விலங்குகளையும் அளித்து வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உத்தரவிட்டது ஆனால் தற்போது வரை ஆக்கிரமிப்பாளர்கள் அப்பகுதியிலிருந்து அகற்றப்படவில்லை.
எனவே மேகமலை வனப்பகுதியில் செய்பவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், "2019ஆம் ஆண்டு மேகமலை வனப்பகுதியில் குடியிருப்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற ஆயிரம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேகமலை வனப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சோதனைக்கு பின்பே செல்கிறது. மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் மூலம் சமாதான கூட்டங்கள் நடைபெற்று வருகிறது சுமூகமான முறையில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், "தேர்தல் நெருங்குவதால் வாக்குகள் பாதிக்கும் என்பதால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 18 பழங்குடியின குடும்பங்கள் மட்டுமே அப்பகுதியில் வசித்து வருகின்றனர்" என கூறினார்.
அப்போது நீதிபதிகள் வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களை அனுமதித்தால் காடுகள் அழியும் சூழ்நிலை ஏற்படும். எனவே, வணிக ரீதியாக விவசாயம் நடைபெறுவதை நிறுத்த வேண்டும் மேலும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.